இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் முயற்சி! – தொடங்கியது ‘ஆபரேஷன் அஜய்’!
இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன எல்லையில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில் காசா முனையிலிருந்து லட்சக் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் கும்பல் நடத்திய தாக்குதலால் பலர் பலியாகியுள்ளனர். நாளுக்கு நாள் இஸ்ரேலில் போர் சூழல் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலில் வசித்து வரும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளை இந்தியா முடுக்கிவிட்டுள்ளது. இஸ்ரேல் அரசிடம் பேசி விமானங்கள் மூலம் அங்குள்ள இந்தியர்களை இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் அஜய் என பெயரிடப்பட்டுள்ளது. ஆபரேஷன் அஜய் மூலம் விமானங்கள் எப்போது இஸ்ரேல் செல்கிறது உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K