கொரோனா பாதித்த 1049 பேர் தலைமறைவு! – பீதியில் திருப்பதி மக்கள்!
திருப்பதிக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா உறுதியான 1049 பேர் தலைமறைவான சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்து திருப்பதி வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் முதலாக 9,164 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் வெளியூரை சேர்ந்த பயணிகளும் உள்ள நிலையில் அவர்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு சம்பந்தபட்ட ஊரின் சுகாதார அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பதியில் கொரோனா தொற்று உறுதியான 1,049 பேர் தலைமறைவாகிவிட்டது தெரிய வந்துள்ளது. அவர்களது செல்போன், முகவரி உள்ளிட்டவற்றை சோதித்ததில் அவை போலியானவை என தெரிய வந்துள்ளது. தலைமறைவான நபர்கள் சொந்த ஊர் திரும்பாமல் திருப்பதியில் சுற்றி திரியும் நிலையில் மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்பதால் திருப்பதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.