இந்த 2023 ஆம் ஆண்டு விடைபெறப்போகிறது. இந்த ஆண்டு கழிந்து அடுத்த புதிய ஆண்டான 2024 தோன்ற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேசிய டாப் 10 நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
1. சந்திரயான் 3 செயற்கைகோள் !
உலகின் உள்ள முக்கிய விண்வெளி ஆய்வு மையமாக இந்தியாவைச் சேர்ந்த இஸ்ரோ உள்ளது. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. சந்திரனின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய இது ஆகஸ்ட் ஆம் தேதி நிலவின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமான நிலை நிறுத்தப்பட்டு, அதன் பின், விக்ரம் லேண்டர் பிரிந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிரங்கி சாதனை படைத்தது. அதன்பின்னர்,. பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம்லேண்டர் பல்வேறு புகைப்படங்கள் எடுத்து, ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
2. ஒடிஷா ரயில் விபத்து
நாட்டையே உலுக்கிய கோர விபத்து விபத்து; கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஒடிஷாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், எஸ்.எம்.வி.டி பெங்களூரு ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் 300பேர் பலியாகினர். சுமார் 1200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்திற்கு தொழிற் நுட்ப கோளாறு காரணம் என விசாரணையில் தெரியவந்தது. இது சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றப்பட நிலையில், ரயில்வே அதிகாரிகள் சிலரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.
3. மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரோன் சிங் தலைமையிலான ஆட்சியில், அங்குள்ள மெய்தி, குக்கி ஆகிய இரு பிரிவுகளுக்கு இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதை எதிர்த்து, குக்கி இனத்தினர் போராட்டம் செய்தனர். இது கலரவமாகி, வன்முறையில் முடிந்தது. இதில்,150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில், பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலுக்கு ஆஸ்கார் விருது!
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்கத்தில், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். வசூலில் சாதனை படைத்த இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கருக்குச் சென்றது. அதில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை கீரவாணி வென்று சாதனை படைத்தார். ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமைபட்ட தருணம் அது.
அதேபோல், சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது யானைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொம்மன், பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி எலிபண்ட் விஸ்பர்ஸ் என்ற டாகுமெண்டரி படத்தை இயக்கிய கார்த்தி கன்சால்வ்ஸுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5.ஆசிய விளையாட்டுப் போட்டி
இவ்வாண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமையை நிரூபித்தனர். இதன் மூலம், இதுவரை இல்லாத வகையில், மொத்தம் 107 பதக்கங்கள் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தி, 4 வது இடம் பிடித்தது. இதில், 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வென்றது. அதேபோல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா 10 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் 2வது இடம்பிடித்தது.
6.மல்யுத்த வீரர்கள் போராட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஜனவரி 18 முதல் ஜூன் 1 வரை தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இப்பிரச்சனை முற்றிய நிலையில், தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்த நிலையில், சில நாட்களாக விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் விருதுகளை திருப்பி அளித்து வருகின்றனர்.
7. ராகுல்காந்தி தகுதி நீக்கம்
கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். இது குறித்து பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. எனவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவித்தார். இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய நிலையில், இது தேசிய அளவில் பேசுபொருளானது. இதுதொடர்பாக காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு பின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மீண்டும் ராகுல்காந்தி எம்பி மக்களவைக்குள் சென்றார்.
8. உத்தரகாண்ட் சுரங்க விபத்து
உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கினர். இந்த மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், தேசிய மீட்பு படை உத்தராகண்ட் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களையும் 17 நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
9. ஜி20 உச்சி மாநாடு
இந்தியாவில் ஜி 20 உச்சி மா நாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த ஜி20 உச்சி மாநாட்டில் உலகில் உள்ள முக்கிய தலைவர்களின் முக்கிய சந்திப்பு மேற்கொள்வதாகும். இதில், 19 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, உலகளாவிய நிதிதொடர்பான விவகாரங்கள் எப்படி கையாள்வது என்பது பற்றி விவாதித்து, ஆலோசனை மேற்கொண்டனர். இதில், ஆப்பிக்க ஒன்றிய நிரந்த உறுப்பு நாடாக சேர்க்கபப்ட்டது. இதில், உயிரி- எரிபொருள் என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நிலையில், இந்தியா – மத்திய கிழக்கு –ஐரோப்பா வழியாக பொருளாதார வழித்தடம் மேற்கொள்ள திட்டமிட்டனர். இந்த முறை ஜி 20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை; அதேபோல் உக்ரைன் போர் தொடர்பாக சர்வதேச தடையால் ரஷிய அதிபர் புதினும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
10. மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மா நிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அடுத்தாண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் பார்க்கப்பட்டது. தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தபடி, சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், மத்திய பிரதேசத்தில் 17 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23 ஆம் தேதியும், தெலுங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் காங்கிரஸும் ஆட்சியைக் கைப்பற்றியது.
மிசோரம் மாநிலத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான லால்துஹோமா தலைமையிலான ஜோரம் மக்கள் இயக்கம் மிசோரமில் ஆட்சி அமைத்துள்ளது.
#சினோஜ்