உயிர் தோழிகள்னா இப்படியா? விஷம் குடித்த தோழிக்கு கம்பெனி குடுத்த தோழிகள்!
மத்திய பிரதேசத்தில் காதலன் பேசாததால் விஷம் குடித்த மாணவியுடன், அவரது தோழிகளும் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் சிஹோர் மாவட்டத்தில் அஸ்தா என்ற நகரப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்த மூன்று மாணவிகள் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். அதில் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பேசி வந்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் அந்த இளைஞர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தியதாக தெரிகிறது.
இதனால் மாணவரை சந்திக்க மூன்று மாணவிகளும் பள்ளிக்கு செல்லாமல் இந்தூர் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு சென்று இளைஞருக்கு போன் செய்தபோதும் அவர் போனை எடுக்காததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அவருடைய தோழியான மற்றொரு மாணவி குடும்ப பிரச்சினை காரணமாக தானும் விஷம் குடிப்பதாக முடிவெடுத்துள்ளார். தனது தோழிகள் இருவரும் விஷமருந்தி சாக முடிவு செய்ததால் அவர்களுடன் தானும் விஷம் அருந்தி இறந்து விடுவதாக மூன்றாவது தோழியும் தெரிவித்துள்ளார்.
இதனால் அங்குள்ள பூங்கா ஒன்றிற்கு சென்று விஷமருந்திய மூன்று மாணவிகளும் மயங்கி விழுந்துள்ளனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரண்டு மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited By Prasanth.K