புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (10:32 IST)

’நண்டு’ மந்திரியை நண்டை வைத்தே பழி வாங்கிய மக்கள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில், கனமழை காரணமாக உடைந்த அணைக்கு, நண்டுகள் தான் காரணம் என்று கூறிய அமைச்சரை, நண்டுகளை வைத்தே பழி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்ற வாரம் மகாராஷ்டிரா மாநிலத்தில், பருவமழை ஆரம்பித்த காரணத்தால் பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அம்மாநிலத்தில் பல இடங்கள் வெள்ளகாடாக காட்சியளித்தன. மேலும் கனமழையால் பல உயிரிழப்புகளும் நேர்ந்தன.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி அருகே உள்ள திவாரே அணை, கனமழை காரணமாக உடைந்ததில், அந்த அணையை சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்து பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் அந்த சம்பவத்தில் 18 பேர் பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் நீர்வளத் துறை அமைச்சர், தனாஜி சாவந்த், அணை உடைந்ததற்கு அந்த அணையில் இருந்த நண்டுகள் தான் காரணம் என்றும், அந்த நண்டுகள் தான் அணையின் தடுப்பு சுவரை பலவீனமாக்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இதனால் ரத்னகிரி பகுதியில் உள்ள மக்கள் பெரும் கோபம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, அணை உடைந்தது குறித்து இவ்வாறு அலட்சியப்போக்கில் பேசிய தனாஜி சவந்தை கண்டிக்கும் வகையில்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஒரு பெட்டி நிறைய நண்டுகளை அவரது வீட்டிற்குள் கொண்டு வந்து போட்டனர்.

இதன் பின்னர் தனாஜியின் வீட்டிற்கு முன் போராட்டம் நடத்தினர். இதனால் நீர்வளத்துறை அமைச்சர் பெரும் பதற்றம் அடைந்தார். மேலும் இச்சம்பவத்தால், ரத்னகிரி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.