மீண்டும் மழையின் கோரப்பிடியில் மும்பை: வெள்ளத்தால் தவிக்கும் மக்கள்
மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால், இயல்பு நிலை பாதிக்கப்பட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை ஆரம்பித்திருப்பதால், கடந்த வாரம் 5 நாட்களுக்கு மழை விடாமல் பெய்தது. இந்த மழையால் மும்பை நகரம் முழுவதும் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. மேலும் ரத்னகிரி அருகே, திவாரே அணை உடைந்து, அதனைச் சுற்றியிருந்த 7 கிராமங்களும் வெள்ளத்தில் மூழ்கியதில் பல வீடுகள் சேதமடைந்ததோடு பலரும் உயிரிழந்தனர்.
இதனையடுத்து பூனேவில் உள்ள ஒரு கல்லூரியின் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். குர்லா பகுதியில் குடிசை மீது சுவர் இடிந்து விழுந்ததில் 24 பேர் பலியானார்கள். அதன்பிறகு மழை ஓரளவு குறைந்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
இந்நிலையில் நேற்று மும்பையில் மீண்டும் கனமழை பெய்தது. காலையில் தொடர்ந்து பெய்த மழையால் மும்பை நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் ரயில் தண்டவாளங்களிலும், சாலைகளிலும் நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
மழை காரணமாக லாம்பாக் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதி அந்தரத்தில் தொங்கியதாக தகவல் வெளியானது.
இதுபோக நவி மும்பை, மற்றும் தானே ஆகிய பகுதிகளிலும், கனமழையால் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.