மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை - கர்நாடக அமைச்சர்
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை பெற அவசியம் இல்லை என கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவிடாமல் எப்பொழுதும் அலைக்கழிப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு மழை அதிகளவில் பெய்து உபரி நீர் வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகாவில் காவிரி குறுக்கே தண்ணீர் தேக்கி வைக்க 4 அணைகள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் காவிரி தண்ணீரை தேக்கி வைக்க மேட்டூர் அணை மட்டுமே உள்ளது.
இந்த சூழ்நிலையில் கர்நாடகா அரசு காவிரியில் 5வது அணையாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ஏற்கனவே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேகதாது அணை கட்டினால் உபரி நீர் திறந்து விடுவது சந்தேகம்தான். எனவே கர்நாடகாவை மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பேசிய கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்க்கவே, மேகதாதுவில் அணை கட்ட விரும்புகிறோம். இதற்காக மத்திய நீர் ஆணையத்தை முறைப்படி அணுகி இருக்கிறோம்.
ஆகவே நாங்கள் தமிழக அரசிடம் இதற்கு ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை. மேகதாதுவில் அணை கட்டினாலும், தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்படாது என அவர் கூறியிருக்கிறார்.