கேரளாவில் பக்கத்து வீட்டு சேவல் கூவி தனது தூக்கத்தை கெடுப்பதாக ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்லிகல் கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ண குருப். வயதான இவர் சமீபத்தில் அளித்த புகார்தான் வைரலாகியுள்ளது. ராதாகிருஷ்ண குருப் வயதானவர் என்பதால் நல்ல தூக்கம் அவசியமாக இருந்திருக்கிறது. ஆனால் இவர் இரவில் தூங்கும்போது இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள சேவல் அதிகாலை 3 மணிக்கே கூவி இவர் தூக்கத்தை கெடுத்து வந்திருக்கிறது.
இதுகுறித்து ராதாகிருஷ்ண குருப், சேவலின் உரிமையாளர் அணில்குமாரிடம் சொன்னபோது, சேவல் கூவுவதற்கு நான் என்ன செய்யமுடியும்? என கேட்டுள்ளார். தினமும் சேவல் ராதாகிருஷ்ணனின் தூக்கத்தை கெடுத்து வந்த நிலையில் அவர் உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.
இதனால் பொறுமையிழந்த அவர் இதுகுறித்து அடூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் புகார் அளித்து, தனது தூக்கத்தை கெடுக்கும் சேவலை அங்கிருந்து பறிமுதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன், இருவர் வீட்டையும் நேரில் வந்து பார்வையிட்டுள்ளனர்.
அணில்குமார் தனது சேவல் கூண்டை மேல் தளத்தில் வைத்திருப்பதால் அதன் கூவல் அதிகமாக கேட்டு ராதாகிருஷ்ணனின் தூக்கம் கலைந்திருப்பதை கண்டறிந்த அவர்கள், சேவல் கூண்டை அடுத்த 14 நாட்களுக்குள் கீழ் தளத்தின் தெற்கு பகுதிக்கு மாற்ற அணில்குமாருக்கு அவகாசம் அளித்துள்ளனர்.
Edit by Prasanth.K