1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 25 மே 2024 (10:20 IST)

6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் விறுவிறுப்பு..! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..!!

PM Modi
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
 
நாட்டின் 18வது மக்களவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில், பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதை அடுத்து, 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.
 
இதுவரை நடந்த ஐந்து கட்ட தேர்தல்களில், 427 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது. இந்நிலையில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில், இன்று ஆறாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
 
இந்நிலையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆறாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகமான வாக்காளர்கள் ஓட்டளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்
 
ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது என்றும் தேர்தல் பணியில் பொதுமக்களின் தீவிரப் பங்கேற்பு இருந்தால் தான் ஜனநாயகம் செழித்து, துடிப்புடன் காட்சியளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இளம் வாக்காளர்கள் தங்கள் ஓட்டு உரிமையைப் பயன்படுத்துமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.