வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (20:58 IST)

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Election Commision
மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்ட வாக்குப்பதிவுகளில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
நாடு முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 13ம் தேதி வரை 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இனி வரும் 20, 26 மற்றும் ஜூன் 1 ஆகிய நாள்களில் எஞ்சியுள்ள 3 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்நிலையில் தற்போது வரை முடிவடைந்துள்ள 4 கட்டத் தேர்தல்களிலும் சேர்த்து 66.95 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
தேர்தல் ஆணைய தகவல்படி, கடந்த 13ம் தேதி நடைபெற்ற 4ம் கட்ட தேர்தலில் 69.16 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இது கடந்த, 2019 மக்களவைத் தேர்தலின் இதே 4ம் கட்ட வாக்குப்பதிவு சதவீதத்தை விட 3.65 சதவீதம் அதிகமாகும். நடப்பு மக்களவைத் தேர்தலின் 3ம் கட்டத் தேர்தலில் 65.68 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 2019 பொதுத் தேர்தலின் 3ம் கட்ட தேர்தலில் 68.4 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
 
கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்ற 2ம் கட்டத் தேர்தலில் 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. 2019ம் ஆண்டு தேர்தலில் இரண்டாம் கட்டத்தில் 69.64 சதவீதம் வாக்குப் பதிவாகி இருந்தது. இதேபோல், கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடந்த முதல் கட்டத் தேர்தலில் 66.14 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.


2019 தேர்தலில், முதல் கட்டத்தில் 69.43 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது வரை ஒட்டுமொத்தமாக 4 கட்டத் தேர்தல்களிலும் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.