பாலியல் வழக்கில் சரணடைய மறுத்த தமிழர்கள்; சுட்டுப் பிடித்த பெங்களூர் போலீஸ்
பாலியல் வழக்கில் தொடர்புடைய தமிழக வாலிபர்கள் சரணடைய மறுத்ததோடு அவர்கள் பெங்களூர் போலீஸாரை தாக்கியதால், குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
தர்மபுரியை சேர்ந்த சங்கர்(25), செல்வகுமார்(26) என்ற இரு மனித மிருகங்கள் பெங்களூரில் வாடகை கார் ஓட்டி வந்தனர். அந்த இரு மனித மிருகங்களும் தங்களது காரில் வைத்து ஒரு அப்பாவி பெண்ணை சீரழித்து, அந்த பெண்ணை கடுமையாக தாக்கி, பின் அந்த பெண்ணை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.
இதனையடுத்து படுகாயமடைந்த அந்த பெண்ணிற்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். பின் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் அவர்கள் காரில் பெல்லந்தூர் அருகே சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, பெல்லந்தூர் பகுதியில் காடுசித்தராபுரா செல்லும் சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அங்கு தமிழக பதிவு எண்ணுடன் வந்த கார் ஒன்று நிற்காமல் இரும்பு தடுப்பு வேலியை இடித்து தள்ளியபடி சென்றது.
போலீஸார் அவர்களை துரத்தி சென்று பிடிக்க முயற்சித்த போது, அந்த கயவர்களில் ஒருவன், போலீஸாரை கத்தியால் குத்தினான்.. இன்னொருவனும் போலீசாரை கத்தியால் குத்திவிடுவதாக மிரட்டினான். போலீஸார் அவர்களை சரணடையும் படி கேட்டனர். அதனை கேட்காமல், அவர்கள் தப்பிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் அவர்கள் இருவரையும் காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.