அபிநந்தனை இந்திய ராணுவ விமானி என சொல்லாத தமிழ் செய்தி ஊடகங்கள்!
காஷ்மீரில் பாகிஸ்தான் விமானங்களை விரட்டி அடிக்க முயன்ற போது இந்திய விமானம் ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் தவறி விழுந்தது.
அப்போது அதில் இருந்த இந்திய விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார். அவர் குதித்த இடம் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் வசம் உள்ள இடமாகும். இதையடுத்து அங்கிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அபிநந்தனை கைது செய்தனர்.
அவர் ரத்த காயங்களுடன் கைது செய்து அழைத்து செல்லப்படும் காட்சிகள் வெளியானது. மேலும் அபிநந்தன் டீ சாப்பிட்ட படி பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கேள்விக்கு பதில் அளிக்கும் வீடியோவும் வெளியானது. அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட செய்தி அனைத்து தமிழக ஊடகங்கள் மற்றும் செய்திதாள்களில் வெளியானது. அபிநந்தனை தமிழக செய்தி நிறுவனங்கள் சென்னையை சேர்ந்தவர், தமிழகத்தை சேர்ந்த விமானி என்றே செய்திகள் வெளியிட்டு உள்ளன. இதனை சமூக வலைத்தளங்களில் பலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்திய விமானி என்று அபிநந்தனை குறிப்பிடாததை கண்டித்து பலர் சமூக வலைத்தளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர். ஆங்கில ஊடகங்கள் தான் தமிழக மீனவர்கள் கைது என்று போடுவார்கள். இந்திய மீனவர்கள் கைது என்று தமிழக மீனவர்களை பொதுவாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுவது இல்லை. இப்போது தமிழ் ஊடகங்களும் இந்திய விமானி என்று குறிப்பிடாமல் தமிழக விமானி சென்னை விமானை என்று குறிப்பிடுவது வேதனை அளிப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.