முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாஜகவின் முன்னணி தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் நேற்றிரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது இந்தியாவையே உலுக்கியுள்ளது. அவரது மறைவு குறித்து உலக தலைவர்களும் தேசிய தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கல் செய்திகளை பதிவு செய்துள்ளனர்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்: பொது வாழ்க்கையில் கண்ணியம் மிக்க தலைவரை நாடு இழந்துவிட்டது
துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு: சுஷ்மாவின் இறப்பு செய்தி கேட்டு பெரிய அளவில் அதிர்ச்சி அடைந்தேன். அவரின் மரணம் இந்தியாவிற்கு பெரிய இழப்பு, எனக்கும் தனிப்பட்ட முறையில் இது பெரிய இழப்பு. அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி, மிக சிறந்த நாடாளுமன்ற எம்பி, நல்ல பேச்சாளர், நிர்வாக திறன் கொண்ட சிறந்த அமைச்சர். அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,
பிரதமர் மோடி: இந்திய அரசியலில் மாபெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது. தனது வாழ்க்கை முழுவதையும் பொதுச் சேவைக்காகவே ஒப்படைத்த ஒரு மாபெரும் தலைவரின் மரணத்தால் நாடே சோகமாகியுள்ளது.ஏழைகளின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டவர் சுஷ்மா சுவராஜ். பல கோடி மக்களுக்கு ஆதர்ச சக்தியாக உதாரணமாக திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். மிகச் சிறந்த நிர்வாகி, தான் பதவி வகித்த அமைச்சரவையில் தனி முத்திரை பதித்தவர் சுஷ்மா சுவராஜ். பல்வேறு நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்பட தீவிரமாக பாடுபட்டவர். முக்கியப் பங்காற்றியவர்.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி: சுஷ்மா சுவராஜின் மரணச் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் ஒரு அசாதாரணமான தலைவர். மிகச் சிறந்த பேச்சாளர். அருமையான நாடாளுமன்ற வாதி. கட்சி பாகுபாடில்லாமல் அனைவருடனும் நட்பு பாராட்டியவர்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்: இன்று நான் நாடாளுமன்றம் வந்த போது கூட சுஷ்மா சுவராஜின் டிவிட்டை பார்த்துவிட்டுத்தான் வந்தேன். அவர் 370 சட்டப்பிரிவு நீக்கம் குறித்து டிவிட் செய்து இருந்தார். ஆனால் இப்போது அவர் இல்லை. என்னால் இதை நம்பவே முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை,
வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கர்: சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது கடினம். ஒட்டுமொத்த தேசமும் வருத்தமடைகிறது
காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்: சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவர் எங்களை விட்டு விரைவில் செல்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை. நான் இளைஞர் காங்கிரசில் இருந்தபோது 1977 முதல் அவரை எனக்கு நன்கு தெரியும். கடந்த 42 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம்
திமுக தலைவர் முக ஸ்டாலின்: முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர். அவரது மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்
திமுக எம்.பி., கனிமொழி: ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர். கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்: பாஜகவில் உள்ள ஒவ்வொரு பெண் நிர்வாகியும் ஒருவரை முன்னுதாரணமாக எடுத்து கொள்கிறார்கள் என்றால் அவர் மரியாதைக்குரிய சுஷ்மா ஸ்வராஜ் அவர்களைத்தான் எடுத்து கொள்வார்கள். உயர்மட்ட குழுவில் பெண்கள் அதிகம் இடம்பெற வேண்டும் என்ற குரல் கொடுத்தவர். பெண்கள் பாராளுமன்ற தேர்தலில் அதிகம் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். தமிழக மீனவர் பிரச்சினைககளுக்கு அவர் எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகள் மிகவும் பாராட்டுக்குரியது ஆகும். முதலமைச்சர், மத்திய அமைச்சர் மற்றும் கட்சிப் பொறுப்பு ஆகிய பதவிகளில் தனது ஆளுமை மற்றும் அன்பை வெளிப்படுத்தியவர் சுஷ்மா சுவராஜ் அவர்கள். இவர் போன்ற ஒரு பெண் தலைவரை இனிமேல் பார்க்க முடியுமா என்ற கவலை உள்ளது. சுஷ்மாவின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பாகும்