காங்கிரஸ் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு.. ஹரியானா முதல்வர் பதவியேற்பு..!
ஹரியானா மாநில முதலமைச்சர் பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்ததை அடுத்து, இன்று ஹரியானா முதல்வர் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 48 தொகுதிகள், காங்கிரஸ் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், எனவே முதலமைச்சர் பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 20 தொகுதிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியது.
ஆனால், சுப்ரீம் கோர்ட் , ஹரியானா முதல்வர் பதவி ஏற்க தடை விதிக்க மறுத்ததை அடுத்து, உடனடியாக இன்று ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனிக்கு ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பதவி ஏற்க தடுக்க வேண்டுமா?" என்று கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
Edited by Siva