ஆக்சிஜன் இல்லைன்னு போஸ்ட் போட்டா அரெஸ்ட் பண்ண கூடாது – உச்சநீதிமன்றம் உத்தரவு!
இந்தியாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி குறைவு போன்றவை குறித்து சமூக வலைதளங்களில் புகார் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட பலவற்றால் நோயாளிகள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தனது தந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆக்ஸிஜன், படுக்கைகள் குறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கூறப்பட்டுள்ளது.