திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2020 (12:02 IST)

ஏர் இந்தியா விவகாரம்: அரசை எதிர்த்து கோர்ட் படி ஏறும் சு.சுவாமி!

ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேச விரோதமானது என சுப்ரமணியன் சுவாமி டிவிட்டியுள்ளார். 
 
நஷ்டத்தில் இயங்கிவரும் அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோது எந்த நிறுவனமும் வாங்க ஆர்வம் காட்டவில்லை. 
 
இந்நிலையில் மீண்டும் மத்தியில் பதவியேற்றுள்ள பாஜக இந்த முறை ஏர் இந்தியாவின் பங்குகளை விற்று விடுவதில் மும்முரமாக இருக்கிறது. இதற்கென அமைச்சர்கள் குழுவும் அமைக்கப்பட்டது.
அதில் 90 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்பதென்றும் மீத 10 சதவீதத்தை மத்திய அரசு நிர்வகிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் ஏர் இந்தியாவின் கடன் சுமை குறித்து அதிகம் யோசிப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போதைய செய்தியின் படி ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்பதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதுமாக தனியார் நிறுவனமாக மாற உள்ளது. 
 
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது. நாட்டின் முக்கிய பொருளை விற்க முடியாது என தெரிவித்துள்ளதோடு, இதனை எதிர்த்து நான் நீதிமன்றம் செல்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.