பெட்ரோல் விலை ரூ.40க்கு விற்க வேண்டும்: மிகப்பெரிய சுரண்டல் என சு.சுவாமி குற்றச்சாட்டு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும்போது அனைத்து நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும் கச்சா எண்ணெய் குறையும் அளவுக்கு வரிகளை உயர்த்தி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வருகின்றனர். இதனால் ரூபாய் 40 முதல் 50க்கு விற்க வேண்டிய பெட்ரோல் விலை தற்போது 90 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து பாஜகவின் ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சாமி அவர்கள் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.40க்கு விற்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அவர் மேலும் கூறியபோது பெட்ரோல் விலை ரூபாய் 90 என்பது இந்திய மக்களிடம் ஒரு மிகப்பெரிய சுரண்டல். சுத்திகரிக்கபடுவதற்கு முன்பு பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூபாய் 30 மட்டுமே. அனைத்து வகையான வரிகள் மற்றும் பெட்ரோல் பம்ப் கமிஷனும் போக, மீதமுள்ள 60 ரூபாயை அரசு சுரண்டுகிறது.
என்பார்வையில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.40 இல் தான் விற்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த எம்பி ஒருவரே மத்திய அரசு மக்களிடம் மிகப்பெரிய சுரண்டல் செய்கிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது