லோக் ஆயுக்தாவை உடனே அமைக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
எவ்வளவு பெரிய உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதியாக இருந்தாலும், அவர்களின் மீது சாட்டப்பட்ட புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை பறிப்பது, கட்டாய ஓய்வு அளிப்பது, சம்பளத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட தண்டனைகளை அளிக்கும் லோக் ஆயுக்தாவை தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும். தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன் வைத்த காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை. லோக் ஆயுக்தா அமைக்கும் பணியை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும் லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இதுபற்றி நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் “உச்ச நீதி மன்றத்திற்குத் தமிழ்நாட்டில் உள்ள நேர்மையாளர்களின் மனமார்ந்த நன்றி. இந்த அரசு, உச்ச நீதிமன்ற ஆணையை ஏற்று செயல்பட மக்கள் வலியுறுத்த வேண்டும். லோக் ஆயுக்தா, ஊழல் அரசியல் பிணியைத் தீர்க்கும் மருந்து” எனக் குறிப்பிட்டுள்ளார்.