செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 14 மார்ச் 2018 (14:01 IST)

சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவிற்கு சலுகை கொடுத்தேன் - சிறை டிஜிபி தகவல்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் அறிவுரைப்படியே சசிகலாவிற்கு சில சலுகைகள் அளிக்கப்பட்டதாக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவ் விளக்கம் அளித்துள்ளார்.


 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் பெங்களூர் பார்ப்பன சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில், சசிகலா உள்ளிட்டோருக்கு சிறையில் 5 அறைகள் உட்பட சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதகாவும், இதற்காக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயனா ராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும், முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
அதன்பின் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.  இந்நிலையில், 2017ம் ஆண்டு சத்தியநாராயண ராவிடம் நடத்திய உயர்மட்ட விசாரணை அறிக்கையை பா.ஜ.க எம்பி ஷோபா நேற்று வெளியிட்டார். அதில், சத்திய நாராயண ராவ் குறிப்பிட்டுள்ளதாவது:

 
சசிகலாவிற்கு முதல் வகுப்பு சலுகை அளிக்க வேண்டும் என்கிற அவரது வழக்கறிஞரின் கோரிக்கை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் கூறியது. ஆனால், சிறை விதிமுறைப்படி மட்டுமே வசதி செய்ய வேண்டும். சிறப்பு சலுகைகள் கொடுக்கக் கூடாது என தலைமை கண்காணிப்பாளரிடம் கூறினேன். எனினும், இதுபற்றி உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினோம். ஆனால், ஒரு மாதமாகியும் அங்கிருந்து பதில் வரவில்லை.
 
அந்நிலையில், முதல்வர் அழைப்பதாக கூறி அவரின் உதவியாளர் என்னை அழைத்தார். அப்போது, சித்தராமையா கூறியதாக கூறி, சசிகலாவிற்கு கட்டில், மெத்தை, தலையனை ஆகியவற்றை வழங்கும்படி தெரிவித்தார். எனவே, அந்த சலுகைகள் மட்டுமே சசிகலாவிற்கு கொடுக்கப்பட்டது. சிறப்பு வசதி செய்து கொடுக்கும்படி வாய் மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதேபோல், சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த மாடியில் பாதுகாப்பு கருதியே வேறு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார்.