சிறையில் அடைக்கப்பட்ட சல்மான்கானுக்கு சிறப்பு வசதிகள் உண்டா?
அபூர்வ வகை மான்களை சுட்டு வேட்டையாடிய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து சல்மான்கான் உடனடியாக காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். சல்மான்கான் சிறைக்குள் செல்லும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சல்மான்கானுக்கு சிறையில் எந்தவித சிறப்பு வசதியும் கிடைக்காது என்று ஜோத்பூர் சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
இந்த நிலையில் சல்மான்கான் தரப்பினர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். மேல்முறையீடு செய்து அதன்பின்னர் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால் அதுவரை சல்மான்கான் சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் சாலையில் படுத்து தூங்கியவர்களை கார் ஏற்றி கொன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து சல்மான்கான் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மனிதர்களை கொலை செய்த வழக்கில் விடுதலை, மானை கொலை செய்த வழக்கில் தண்டனை என டுவிட்டர் பயனாளிகள் பதிவு செய்து வருகின்றனர்.