1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 23 மே 2024 (12:40 IST)

ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்..! பிரதமர் மோடிக்கு சித்தராமையா மீண்டும் கடிதம்..!!

Karnataka CM
ஆபாச வீடியோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
 
கர்நாடகாவில் உள்ள ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தள எம்.பியாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா உள்ளார். மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
 
இதனை விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஏற்கெனவே 5 முறை அவருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை.
 
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில், வெளிநாட்டில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் அனைத்து சட்ட வழிகளிலும் ஒத்துழைக்க சிறப்பு விசாரணை குழு தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனவே, இதில் தலையிட வெளியுறவுத்துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 
மேலும், வெளியுறவு அமைச்சகம் மூலம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச போலீஸ் ஏஜென்சி மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.