1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 17 டிசம்பர் 2018 (08:45 IST)

ரஃபேல் தீர்ப்பு – ஏறுமுகத்தில் ரிலையன்ஸ் குழுமம் !

ரஃபேல் போர் விமான ஊழல் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

பிரான்ஸுடனான போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளால் பாஜக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. பாஜக அரசு இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 30000 கோடி அளவிற்கு சலுகைகள் வழங்கியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தக் குற்றச்சாட்டு குறித்து நாடு முழுவதும் விவாதங்களை எழுப்பும் வண்ணம் பேசினார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகளில் கூட இந்த குற்றச்சாட்டு பெரும் பங்கு வகித்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டு குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பில் முறைகேடுகள் எதுவும் நடந்ததற்கான போதுமான சாட்சியங்கள் இல்லை எனவும் மேலும் விமானம் வாங்கும் மத்திய அரசின் முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் இப்போது இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் நிறுவனத்தின் பங்குகளின் விலை சுமார் 16 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. அதேப் போல ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரெச்சர் நிறுவனத்தின் பங்குகளின் விலையும் சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளது.