”ஆர்.எஸ்.எஸ்” க்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்"… மனம் திறந்து நன்றி தெரிவித்த ராகுல்
மக்களிடம் கொள்கை ரீதியான போரை எடுத்து செல்வதற்கு உதவிய ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-விற்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததற்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது, ஆமதாபத் கூட்டுறவு வங்கியில், ரூ.750 கோடி மதிப்பிலான நோட்டுகளை மாற்றி ஊழல் நடந்துள்ளது என ராகுல் காந்தி தவறாக கூறியதாக குற்றச்சாட்டு ஒன்று எழுந்தது.
இதனை தொடர்ந்து நேற்று குஜராத்தின் அகமதாபாத் நகரின் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக ஆமதாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார் ராகுல் காந்தி.
அப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக-விற்கு நன்றி கூறும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்தார். அந்த பதிவில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக கட்சியினர் தொடர்ந்துள்ள ஒரு வழக்கில் தான் ஆஜர் ஆக ஆமதாபாத்திற்கு வந்துள்ளதாகவும், இந்த தருணத்தில் தான் பாஜக-விற்கு தனது நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாகவும் பகிர்ந்திருந்தார்.
மேலும் ”பொதுமக்களிடம் ஆர்.எஸ்.எஸ்., பாஜக-விற்கு எதிரான கொள்கை ரீதியிலான போரை எடுத்துச் செல்வதற்கு இந்த களங்களையும் வாய்ப்புகளையும் வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், வாய்மையே வெல்லும் “ என ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜக-விற்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.