வயநாடு ஒரு தொகுதி தான்.. ஆனால் 2 எம்பிக்கள்: ராகுல் காந்தி
வயநாடு என்பது ஒரு தொகுதியாக இருந்தாலும் அந்த தொகுதிக்கு இரண்டு எம்பிகள் இருப்பார்கள் என்று ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து, இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருடன் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா, ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோர் இருந்தனர்.
முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்யும் முன், பிரியங்கா காந்தி ஊர்வலமாக வந்து மக்களிடம் உரையாற்றினார். அதன் பின், ராகுல் காந்தி பேசிய போது, "வயநாடு மக்களுக்கும் எனக்கும் உள்ள உறவை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். என்னை பாதுகாத்தது போல என் சகோதரியையும் கவனித்து, அவரையும் பாதுகாக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
"வயநாட்டில் நான் அதிகாரபூர்வமற்ற எம்பியாக இருந்தாலும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்க தலையிட்டு உரிமை எடுத்து முன் வருவேன். எனவே, வயநாடு தொகுதிக்கு என் சகோதரி மட்டும் இன்றி, நானும் அதிகாரபூர்வமற்ற எம்பியாக செயல்படுவேன்," என்று அவர் பேசினார். அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva