பிரச்சாரத்திற்கு போகாமல் ஜாலி பார்ட்டியில் ராகுல் காந்தி! – வெளியான வீடியோவால் பரபரப்பு!
குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லாமல் பார்ட்டி ஒன்றில் ராகுல்காந்தி கலந்து கொண்டதாக வெளியாகியுள்ள வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகினார். அதை தொடர்ந்து காங்கிரஸ் சரியான தலைமை இல்லாமல் திண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் கடும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் நடக்க உள்ள குஜராத் சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் ஆயத்தம் ஆகி வருகிறது. குஜராத்தில் மே 1ம் தேதி ராகுல்காந்தி கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டம் நடத்தப்பட இருந்த நிலையில் ராகுலின் அனுமதி கிடைக்காததால் அது 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ராகுல்காந்தி நேபாளத்தின் காத்மண்டுவில் சீன வெளியுறவு துறை அதிகாரி உள்ளிட்ட சிலரோடு பப் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. முன்னதாக ஏப்ரல் 4ம் தேதி குஜராத் சபர்மதி ஆசிரமத்தில் காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
இப்படி தொடர்ச்சியாக குஜராத் சார்ந்த விஷயங்களை ராகுல்காந்தி அலட்சியப்படுத்தி வருவது குஜராத் காங்கிரஸாருக்கே அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பார்ட்டி வீடியோ குறித்து இன்னமும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.