செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2025 (17:00 IST)

ராகுல் காந்தியால் எனக்கு 250 ரூபாய் நஷ்டம்.. நஷ்ட ஈடு கேட்ட பால் வியாபாரி..!

ராகுல் காந்தி பேச்சைக் கேட்டுக் கொண்டே பால் ஊற்றிய போது ஐந்து லிட்டர் பால் கொட்டி விட்டது என்றும் அதற்கு ராகுல் காந்தி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் பால் வியாபாரி ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழாவில் ராகுல் காந்தி பேசினார் என்பதும் அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது. குறிப்பாக அவர் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் நாங்கள் போராடுகிறோம் என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
 
 இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதை கேட்டுக் கொண்டே பால் ஊற்றியதாகவும் அப்போது தான் கையில் வைத்திருந்த அந்த ஐந்து லிட்டர் பால் கொட்டி விட்டது என்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் சவுத்ரி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
 
தனக்கு ராகுல் காந்தியின் பேச்சை கேட்டதால் 5 லிட்டர் பால் நஷ்டம் ஆகிவிட்டது என்றும் ஒரு லிட்டர் பால் 50 ரூபாய்க்கு விற்பேன், எனக்கு 250 நஷ்டம் ஆகிவிட்டது எனவே அவர்தான் எனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விசாரணைக்காக நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படுமா என்ற சந்தேகம் இருப்பதாக வழக்கறிஞர்கள் வட்டாரம் கூறுகின்றன. 
 
Edited by Mahendran