வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (19:43 IST)

ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் - பிரதமர் மோடி

ஒடிசா ரயில் விபத்து பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ள நிலையில்,  இவ்விபத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவின்  ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஜூன் 2) சென்னை நோக்கி வந்தபோது, ஒடிஷா மாநிலம் பாலாசோர் அருகே தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த ரயில் தடம்புரண்டு  மற்றொரு தண்டவாளத்தில் விழுந்ததில், பெங்களூரில் இருந்து கொல்கத்தா  நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் தடம்புரண்டு, கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்திற்கு உலகத் தலைவர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள்  எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி  ஒடிசா வந்தடைந்தார். புவனேஷ்வர் விமான நிலையத்திலிருந்து விபத்து பகுதிக்கு அவர் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி விபத்து நடந்த பகுதிக்குச் சென்று கள   நிலவரங்களை ஆய்வு செய்து, காயமடைந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, ’’ரயில் விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை வழங்க அரசு உதவும்.  இவ்விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து நடைபெற்ற இடத்தில் ரயில் பாதைகளை சீர் செய்யும் பணியில் ரயில்வேதுறையினர் ஈடுபட்டுள்ளனர் ’’என்று தெரிவித்துள்ளார்.