இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!
இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா குமார திசநாயக்க உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், அதேபோல் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த படகுகள் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் என்றும் கூறப்படுகிறது.
மூன்று நாள் அரசு பயணமாக இலங்கை சென்ற பிரதமர் மோடி, இலங்கை அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என்றும், பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகளை இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி விவாதித்ததாகவும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையை தொடர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, இலங்கை அதிபர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், விரைவில் இலங்கை அரசு இதற்கான நல்ல முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
வரும் காலங்களில் இந்தியா–இலங்கை இடையிலான கூட்டாண்மையை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்காக 10000 வீடுகள் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்றும், விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்றும் அவர் கூறினார்.
Edited by Siva