ராகுல் பாபா..நாங்களும் போடுவோம் லிஸ்ட்! – ராகுல் காந்திக்கு பிரகாஷ் ஜவடேகர் பதிலடி!
கொரோனா பாதிப்பு காலங்களில் மத்திய அரசின் சாதனைகள் என ராகுல் காந்தி வெளியிட்ட பட்டியலுக்கு எதிராக பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.
கொரோனா பரவலை தடுக்க பாஜக மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தொடர்ந்து ராகுல்காந்தி குற்றம் சாட்டி வருகிறார். முறையாக பொதுமுடக்கத்தை அமல்படுத்தவில்லை என்றும், வெளிமாநில தொழிலாளர்கள் கால்நடையாக சென்று இறந்த சம்பவங்கள் போன்றவற்றிலும் காங்கிரஸ் மத்திய அரசை சாடி வருகிறது. காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்கு பாஜகவும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பாஜக அரசை பகடி செய்யும் விதமாக சாதனை பட்டியல் என்ற ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கொரோனா காலத்தில் காங்கிரஸின் சாதனைகள் என்ற பெயரில் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “ராகுல் பாபா கொரோனாவை எதிர்த்து இந்தியா வென்றுள்ளதை பாருங்கள். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிரேசில் நாடுகளை விடவும் இந்தியாவில் பாதிப்புகளும் இறப்பு எண்ணிக்கைகளும் மிகவும் குறைவு. உற்சாகத்திற்காக விளக்கேந்தியதை விமர்சித்து இந்திய மக்களையும், கொரோனாவுக்கு எதிராக போராடியவர்களையும் கேவலப்படுத்திகிறீர்கள்” என்று கூறியுள்ளார். மேலும் மாத வாரியாக காங்கிரஸில் நடந்த சம்பவங்கள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.