ஸ்மிருதி ராணியின் உதவியாளரின் கொலையில் திடீர் திருப்பம் – கொன்றது பாஜகவினர் எனப் போலிஸ் தகவல் !
சில நாட்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட சுரேந்தர் சிங் தனது சொந்தக் கட்சியை சேர்ந்தவர்களால்தான் கொல்லப்பட்டார் என உத்தரபிரதேச போலிஸ் தகவல் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது சொந்த தொகுதியான அமேதியில் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார் ஸ்மிருதி ராணி. ஆனால் அந்த வெற்றியை முழுமையாக கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார். அமேதி தொகுதியில் ஸ்மிருதிக்கு உதவியாளராக இருந்த சுரேந்தர் சிங் மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளார்.
பரௌலியா கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான சுரேந்திரா சிங், அமேதி மக்களவைத் தொகுதியில் ஸ்மிருதி இரானிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக பங்காற்றியவர். இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஸ்மிருதி சுரேந்தரின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு தூக்குத்தண்டனை வாங்கித் தருவேன் என உறுதி அளித்தார்.
இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய உ.பி.போலிஸார் கொலையில் ஈடுபட்ட ராமச்சந்திரா, தர்மநாத் மற்றும் நஸீம் ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். இன்னும் இரண்டு பேரை விரைவில் கைது செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கொலையில் ஈடுபட்ட அனைவரும் பாஜகவை சேர்ந்தவர்கள்தான் என்றும் உட்கட்சி அரசியல் மோதலே கொலைக்கான காரணம் எனவும் உ.பி. டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.