1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (11:01 IST)

அரசை அசைக்க முடியுமா? எதிர்க்கட்சிகளுக்கு பினராயி வார்னிங்!!

மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது என கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி. 

 
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித், கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீனில் வெளியே வந்தார். 
 
ஆனால் தற்போது அவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக கூறி கேரள அரசியலை புறட்டிப்போடும் சில தகவல்களை அளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, தங்க கடத்தலில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளது. அவர் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, அவரது மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என கூறினார். கேரள அரசியலில் பெரும் பூகம்பத்தை இது கிளப்பியது. 
கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையிலும் கேரளாவில் ஆங்காங்கே முதல்வர் செல்லும் இடங்களில் சாலை மறியல், கருப்பு கொடி காட்டுதல் போன்ற செயல்கள் அரங்கேறி வருகிறது. மேலும் எதிர்கட்சியினர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
எனவே பினராயி விஜயன் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வழிநெடுக பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டு வருகிறார்கள். 
 
இதற்கிடையில் கோட்டயத்தில் உள்ள கேரள கெசட்டட் அதிகாரிகள் சங்கத்தின் 56 வது ஆண்டு மாநாட்டின் பிரதிநிதிகள் கூட்டத்தை தொடங்கி வைத்த பினராயி விஜயன் அங்கு பேசியதாவது,  மக்களுக்கு சிறப்பான ஆட்சியை அரசு வழங்கி வருகிறது. மாநில நலனுக்கு எதிராக நிற்கும் எந்த சக்திகளுக்கும் அரசு அடிபணியாது. எந்த விதமான தந்திரங்களும் இங்கு வேலை செய்யாது. அரசை அசைக்க முடியும் என எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது தவறு என பேசியுள்ளார்.