1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 4 மே 2020 (11:57 IST)

அதிகாலை முதலே மதுக்கடை முன் வரிசையில் நிற்கும் குடிமகன்கள்

அதிகாலை முதலே மதுக்கடை முன் வரிசையில் நிற்கும் குடிமகன்கள்
நாடு முழுவதும் இன்று முதல் மே 17ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட ஊரடங்கு தொடங்க இருக்கும் நிலையில் ஒரு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே முதல் இரண்டு கட்ட ஊரடங்கு போல் இல்லாமல் மூன்றாம் கட்ட ஊரடங்கு நேரத்தில் ஒரு சில கடைகள் திறக்கவும் அலுவலகங்கள் இயங்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அந்த வகையில் மத்திய அரசின் அறிவுரையின் படி கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மது கடைகள் திறக்கப்படும் என்றும் மதுக்கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் மதுக்களை வாங்கிச் செல்லலாம் என்றும் பார்கள் திறக்கப்படாது என்றும் மது பாட்டில்களை வாங்கி வீட்டில் சென்றுதான் குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலுள்ள ஹூப்லி என்ற பகுதியில் அதிகாலை முதலே மதுக்கடைகளில் மது பிரியர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர். காலை 9 மணிக்குத்தான் மதுக்கடைகள் திறக்கும் என்ற நிலையில் காலை 6 மணி முதல் வரிசையில் நிற்க ஆரம்பித்து விட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் உடனடியாக அந்த பகுதிக்கு வந்த போலீசார் சமூக இடைவெளியுடன் வரிசையில் இருக்க அறிவுறுத்தினார்கள்
 
அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட பல மணி நேரம் பொது மக்கள் வரிசையில் நின்றது இல்லை என்றும் ஆனால் இரண்டு மாதங்களுக்கு பின் திறக்கப்படும் மதுக்கடைகளில் மது பாட்டில்கள் வாங்க இவ்வாறு வரிசையில் நிற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நல்லவேளையாக தமிழகம் மற்றும் புதுவையில் மதுக்கடைகள் இன்னும் திறக்கப்படவில்லை என்பது ஆறுதலான செய்தியாக உள்ளது