1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 23 நவம்பர் 2016 (12:32 IST)

இனி 2000 ரூபாய் நோட்டுகள் பிக் பஜாரில் கிடைக்கும் - புதிய அறிவிப்பு

ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாதவர்கள், தங்கள் ஊரில் உள்ள பிக் பஜார் நிறுவனத்திடம் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

 
கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார்.    
 
இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.   
 
ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்த மாத சம்பள தேதி நெருங்கும் வேளையில், அன்றாட செலவுகளுக்கு பணம் எடுக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 
எனவே, வங்கி, ஏ.டி.எம் மையங்களை தவிர மற்ற இடங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் பங்குகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், வருகிற 24ம் தேதி முதல், பிக் பஜார் நிறுவனங்களில், பொதுமக்கள், தங்களிடம் உள்ள டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 266 பிக் பஜார்கள் உள்ளன. எனவே, இதன் மூலம் ஏ.டி.எம் மையங்களில் கூட்டம் கட்டுப்படுத்தப்படும் என மத்திய அரசு கருதுவதாக தெரிகிறது. 
 
ஆனால், இந்த நடவடிக்கைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.