வெங்காயம் சாப்பிடாமல் என்ன சாப்பிடுகிறாராம்? – ப.சிதம்பரம் கிண்டல்
தான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்
பாராளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பங்கேற்று வருகின்றனர். மக்களவையில் வெங்காய விலை உயர்வு, தட்டுப்பாடு குறித்து எம்பிக்களின் கேள்விகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் வெங்காய தட்டுப்பாடு இல்லை. டிசம்பர் 2 ஆம் தேதி நிலவரப்படி இந்தியாவில் 5,70,373 மெட்ரிக் டன்கள் வெங்காயம் கையிருப்பு உள்ளதாக குறிப்பிட்டார்.
நிர்மலாவின் இந்த பேச்சை கேட்டு காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே, நீங்களும் வெங்காயம் சாப்பிடுகிறவர்தானே என ஆவேசமாக கேட்க அதற்கு நிர்மலாவோ வெங்காயமும் பூண்டும் கலக்காத உணவை உண்ணும் பரம்பரை தமது என பதில் அளித்தார்.
இதற்கு பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் சிறையிலிருந்து வெளியே வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் நிர்மலா சீதாராமன் பேசியது குறித்து கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம் ‘நிதியமைச்சர் வெங்காயம் சாப்பிடவில்லை என்றால் என்ன சாப்பிடுகிறார்? பட்டர் ப்ரூட் சாப்பிடுகிறாரா?” என நக்கலாக கேள்வி எழுப்பியுள்ளார்.