எக்கசக்கமாய் விலையேறிய வெங்காயம்! - மக்கள் அதிர்ச்சி!
வெங்காய வரத்து குறைவால் வெங்காயம் நாளுக்கு நாள் விலையேறி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடமாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக வெங்காய சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டிற்குள் வெங்காயத்திற்கு பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ 60 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது 200 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசு வெங்காயத்தை துருக்கி முதலான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. என்றாலும் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் இந்தியா வருவதற்கு டிசம்பர் இறுதி வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 30 லாரிகளில் வந்த வெங்காயம் தற்போது 10 லாரிகள் கூட வராததால் விலை மேலும் அதிகரித்து வருகிறது. விலையேற்றத்திற்கு விரைவில் அரசு தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.