ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 16 அக்டோபர் 2019 (07:09 IST)

ப.சிதம்பரம் இன்று மீண்டும் கைது! எப்போது ஜாமீன் கிடைக்கும்?

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் அவர்கள் ஏற்கனவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் இருக்கும் நிலையில், அதே வழக்கில் இன்று அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்படவுள்ளார். சிதம்பரம் அவர்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதுகுறித்த வழக்கு நேற்று விசாரணை நடந்தபோது, நீதிமன்ற வளாகத்தில் ப சிதம்பரம் அவர்களை 30 நிமிடங்கள் விசாரணை செய்யலாம் என்றும், அதன் பின்னர் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம் என்றும், திகார் சிறைக்கு அவர் அனுப்பப்பட்ட பின்னர் அங்கேயே அவரை கைது செய்யலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது
 
இதனை அடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் ’ப.சிதம்பரம் அவர்களை நீதிமன்ற வளாகத்திலேயே விசாரிக்கிறோம் என்றும் விசாரணைக்கு பின் இங்கேயே அவரை கைது செய்கிறோம் என்றும் நீதிபதியிடம் தெரிவித்தனர். ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, அவருடைய கெளரவத்தை கணக்கில் கொண்டு பொது இடத்தில் அவரை கைது செய்ய வேண்டாம் என்றும், திகார் சிறையில் நாளை காலை கைது செய்து விசாரித்து கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால் இன்று காலை சிதம்பரம் அவர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது 
 
இந்த நிலையில்தான் ப.சிதம்பரம் அவர்களின் ஜாமீன் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சிறையில் தொடர்ந்து இருக்கும் ப.சிதம்பரம் அவர்களை அதிகாரிகள் அவமானப்படுத்த நினைப்பதாகவும், எந்த காரணமும் இல்லாமல் அவருடைய காவல் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும், எனவே அவரை உடனே ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் தரப்பினர் வாதிட்டனர். இந்த மனு குறித்த விசாரணை இன்று நடைபெறும். இன்றைய விசாரணையில் சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது