கல்லா கட்டிய விழாக்கால விற்பனை; 4 நாட்களில் 26 ஆயிரம் கோடிக்கு விற்பனை
ஆன்லைன் விற்பனை தளங்களில் விழாக்கால தள்ளுபடி விற்பனைகள் தொடங்கிய நிலையில் கோடி கணக்கில் விற்பனை நடைபெற்றுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் முதலாகவே விழாக்கள் அதிகம் நடப்பதால் வருடம்தோறும் அக்டோபரில் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்கள் அதிரடி விழாக்கால விற்பனையை மேற்கொண்டு வருகிறது.
ப்ளிப்கார்ட் நிறுவனம் Big Billion Days என்ற பெயரிலும், அமேசான் நிறுவனம் Great Indian Festival என்ற பெயரிலும் நடத்தும் இந்த விழாக்கால விற்பனையின் போது பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள், புதிய மாடல் மொபைல்கள், துணிகள், அணிகலன்கள் என பலவிதமான பொருட்களும் அதிகபட்ச தள்ளுபடியில் விற்கப்படுவதால் மக்கள் இந்த சமயங்களில் அதிகமான பொருட்களை வாங்குகின்றனர்.
தற்போது கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் விழாக்கால விற்பனை முந்தைய ஆண்டை போல வசூல் சாதனை படைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விழாக்கால விற்பனை தொடங்கி 4 நாட்களில் சுமார் 26 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது இந்தியாவில் அதிகம் பொருட்கள் விற்கும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் இரு நிறுவனங்களின் ஒட்டு மொத்த வியாபாரத்தின் தொகையாகும்.