வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (17:07 IST)

எந்த பிரதமரும் மோடியை போல பேசியதில்லை..! பிரதமர் பதவிக்குரிய மாண்பை சீர்குலைத்துவிட்டார்..! மன்மோகன் சிங்...

Manmohan Singh
பிரதமர் பதவிக்குரிய மாண்பை நரேந்திர மோடி சீர்குலைத்துவிட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கடைசிகட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நாளில்தான் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் பதவிக்குரிய மாண்பைச் சீர்குலைத்துவிட்டார் மோடி என்று விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வெறுப்பு பேச்சையே மோடி பேசி வருகிறார் என்றும் மக்களை பிளவுபடுத்தும் வகையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் உள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 
 
இதற்கு முன்பு எந்த பிரதமரும் மோடியை போல வெறுப்பு பேச்சையோ, தரமற்ற உரையையோ, கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தவில்லை என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

குறிப்பிட்ட சமுதாயத்தினரையும் எதிர்க்கட்சிகளையும் தரம் தாழ்ந்த முறையில் மோடி விமர்சித்து வருகிறார் என்றும்  காங்கிரஸ் ஆட்சியால்தான் ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டம் பாதுகாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளைஞர்கள் கவனத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.