அடுத்த முறை தங்க பதக்கம் வெல்லலாம்.! நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து.!!
வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டி நேற்று நள்ளிரவு நடந்தது. இதில், இந்தியா சார்பில் தங்க மகன் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் இடையே கடும் போட்டி நிலவியது. மொத்தம் 6 வாய்ப்புகளில் நீரஜ், அர்ஷத் இருவருமே தங்களின் முதல் வாய்ப்பில் தவறிழைத்து கோட்டை விட்டனர்.
2வது வாய்ப்பில் அர்ஷத் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து அசத்தினார். கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்சில் நார்வே வீரர் ஆந்த்ராஸ் தோர்கில்ட்சென் (90.57 மீட்டர்) படைத்த சாதனையை அர்ஷத் நதீம் முறியடித்தார். அவருக்கு போட்டியாக நீரஜ் சோப்ரா தனது 2வது வாய்ப்பில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து 2வது இடத்தை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் அடுத்த 3 வாய்ப்புகளையும் நீரஜ் தவறிழைத்து வீணாக்கினார். இதனால் கடைசி வாய்ப்பான 6வது வாய்ப்பில் நீரஜ், பாகிஸ்தான் வீரர் அர்ஷத்தை வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கடைசி வாய்ப்பிலும் அவர் தவறிழைத்து தங்கம் வெல்லத் தவறினார்.
இதன் மூலம் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார். வெள்ளி பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நீரஜ் சோப்ராவிற்கு, பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.
தங்கப்பதக்கம் வெல்ல முடியவில்லை என்று கவலை கொள்ள வேண்டாம் என்று பிரதமர் கூறினார். அடுத்த முறை இன்னும் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வெல்லலாம் என்று நீரஜ் சோப்ராவிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.