18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து, 18 படி ஏறியதும் நேரடியாக ஐயப்பனை தரிசனம் செய்யும் திட்டம் அமலுக்கு வர இருப்பதாக சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தர்கள் 18 படிகளில் ஏறிய பின்னர், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள மேம்பாலத்தில் ஏறி, மூன்று வரிசைகளில் நின்று ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். இதனால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகிறது. மேலும் ஒருசில வினாடிகள் மட்டுமே தரிசனம் செய்ய முடிகிறது.
இந்த நிலையில், சபரிமலை சன்னிதானத்தில் பதினெட்டு படிகள் ஏறியதும், கொடி மரத்தின் இரு பக்கங்கள் வழியாக சென்று ஐயப்ப சாமியை தரிசிக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மார்ச் 14 ஆம் தேதி முதல் 6 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பக்தர்கள் நீண்ட நேரம் ஐயப்பனை தரிசிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 15 மீட்டர் தூரம் வரை நடந்தபடியே ஐயப்பனை தரிசிக்க வாய்ப்பு உள்ளதால், குறைந்தபட்சம் 30 வினாடிகள் வரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva