கோவில்பட்டி வந்த சபாநாயகர் அப்பாவுக்கு கறுப்புக்கொடி.. கிராம மக்கள் ஆவேசம்..!
கோவில்பட்டி அருகே நடைபெற்ற விழாவிற்கு வருகை தந்த சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர்களுக்கு கிராம மக்கள் திடீரென கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி தனியார் தினசரி சந்தை கால்கோள் விழாவிற்கு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது, அந்த பகுதி கிராம மக்கள் சாலை கம்பங்களில் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தனியார் தினசரி சந்தை சட்ட விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இந்த சந்தையின் புதிய கட்டடங்களை திறப்பு விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொள்ள வந்தது, கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஏற்கனவே விளம்பரப் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று சபாநாயகர் அப்பாவும், அமைச்சர் கீதா ஜீவனும் கிராம மக்களுக்கு கோரிக்கை வைத்த நிலையில், அந்த கோரிக்கையை ஏற்காமல் இருவரும் விழாவில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் கருப்புக்கொடி காட்டியதன் மூலம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran