1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 6 மே 2024 (15:46 IST)

நீட் தேர்வு முறைகேடு.! நாடு முழுவதும் 50 பேர் கைது..!

NEET
ஆள்மாறாட்டம் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
எம்பிபிஎஸ்., பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் 557 நகரங்களில் நீட் தேர்வு எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்று முடிவடைந்தது. ஜூன் 14ஆம் தேதி முடிவு வெளியாகிறது.
 
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடித்துள்ளனர். நவி மும்பியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ராஜஸ்தான் மாநிலம் விவாடியைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது ஆள்மாறாட்டம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று நீட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோதே ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமானது.

நீட் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 14 பேர் பீகார் மாநிலத்தில் கைது செய்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என தேசிய தேர்வு முகமை மறுத்து வரும் நிலையில் வினாத்தாள் கசிவு தொடர்பாக 14 பேரை கைது செய்தனர்.


நீட் வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் மோசடி தொடர்பாக நாடு முழுவதும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.