ஜம்மு காஷ்மீரில் மர்ம நோய் காரணமாக 16 பேர் பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபமாக கொரானாவுக்கு பிறகு ஆங்காங்கே தென்படும் விநோத நோய்கள் மற்றும் உயிரிழப்புகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதாக உள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பதால் என்ற கிராமத்தில் மர்ம நோய் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாதத்தில் நடந்த ஒரு விருந்தில் பலர் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு வீட்டை சேர்ந்த சிலருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் பலியாகியுள்ளார்கள்.
அதன் பின்னர் மற்றொரு குடும்பத்தில் அதே அறிகுறிகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் பலியானார்கள். அடுத்தடுத்து அதே அறிகுறிகளுடன் பலர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியாகியுள்ளனர்.
கடந்த 45 நாட்களுக்குள் அந்த மண்டலத்தில் இந்த அறிகுறிகளோடு 16 பேர் பலியாகியுள்ள நிலையில் இதற்கான காரணம் குறித்து மத்திய மருத்துவக்குழு காஷ்மீரில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொற்று வியாதிக்கான அறிகுறிகள் இல்லை என்றும், நியூரோ டாக்சின்களால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இந்த தொடர் பலியால் காஷ்மீரில் பரபரப்பு நிலவி வருகிறது.
Edit by Prasanth.K