வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 17 பிப்ரவரி 2018 (12:36 IST)

மோடி கூறித்தான் எல்லாம் செய்தேன் - ஓ.பி.எஸ் ஓப்பன் டாக்

பிரதமர் மோடி சொல்லித்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்தேன் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

 
முதல்வர் பதவி பறிக்கப்பட்டதும், ஜெ.வின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்ம யுத்தத்தை தொடங்கினார். அவர் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் மட்டுமே சென்றனர். எனவே, அவரால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர முடியவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் சசிகலா தரப்பு அமர வைத்தது.
 
அதன் பின் சில மாதங்கள் நீடித்த ஓ.பி.எஸ்-ஸின் தர்ம யுத்தம் முடிவிற்கு வந்தது. இரு அணிகளும் இணைந்தது. ஆனாலும், ஓ.பி.எஸ்-ஸுக்கும், அவரது அணியில் இருந்தவர்களுக்கும் சரியான அங்கிகாரம் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியானது. ஆனால், அதை ஓ.பி.எஸ் மறுத்தார்.
 
இந்நிலையில், தேனியில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய ஓ.பி.எஸ் “பிரதமர் மோடி கூறியதால்தான்  இரு அணிகளையும் இணைத்தேன். கட்சியை காப்பாற்ற அணிகள் இணைப்பு அவசியம் என மோடி கூறினார். எனக்கு கட்சி பதவி மட்டும் போதும். அமைச்சர் பதவி வேண்டாம் என அவரிடம் கூறினேன். ஆனால், நான அமைச்சரவையில் இருக்க வேண்டும் என மோடி கூறினார். அதனால்தான் தற்போது அமைச்சராக இருக்கிறேன். ஜெ. எல்லாவற்றையும் எனக்கு கொடுத்து விட்டார். எனக்கு பதவி ஆசை கிடையாது” என அவர் பேசியுள்ளார்.
 
பாஜகவின் ஆதரவு மற்றும் பின்னணியிலேயே தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருகிறது என்கிற கருத்து நிலவி வரும் வேளையில், அதை உறுதி செய்யும் விதமாக ஓ.பி.எஸ் பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், தனக்கு பிரதமரின் ஆதரவு இருக்கிறது என்பதை எடப்பாடி, பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக பாஜக தலைகளுக்கு காட்டும் விதமாக ஓ.பி.எஸ் இப்படி பேசியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.