மாயமான 11 கேரளர்கள் ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தது கண்டுபிடிப்பு
கேரளாவின் திரிக்கரிப்பூரைச் அடுத்த இலம்பாச்சியை சேர்ந்த 24 வயதான பிரோஸ்கான் கடந்த மாதம் 22-ந்தேதி குடும்பத்தினரிடம் கோழிக்கோடுச் செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டுச் சென்றது தெரிய வந்தது.
அவர் கடந்த 5-ந்தேதி குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மும்பையில் இருப்பதாகவும், இனி தன்னை தேட வேண்டாம், இந்த தகவலை யாரிடமும் கூற வேண்டாம் என்றும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டார்.
ஏற்கனவே கேரள வாலிபர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதாக வெளியான தகவலை அறிந்திருந்த குடும்பத்தினர் இதனை உடனடியாக காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றனர். அவர்கள் மூலம் மத்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய அரசு உளவுத்துறை அதிகாரிகள் மூலம் பிரோஸ்கானை பிடிக்க முயற்சி மேற்கொண்டது. இந்நிலையில், பிரோஸ்கான், மும்பை டோங்கிரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருப்பதை கண்டு பிடித்தனர். அவரை உடனடியாக ரகசிய இடத்திற்கு கொண்டுச் சென்று விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் பிரோஸ்கானுக்கும், கேரளாவில் இருந்து ஏற்கனவே மாயமானவர்களில் 17 பேருடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதில் 11 வாலிபர்கள் சிரியா நாட்டிற்கு சென்று ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.