திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (14:48 IST)

மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்து சைக்கிளை திருடிய தொழிலாளி – புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலை!

இந்தியாவில் கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சொந்த மாநிலங்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு படாத பாடு பட்டு வருகின்றனர். பல கி. மீ தூரத்தை நடந்தோ அல்லது சைக்கிளிலோ அவர்கள் செல்ல நேரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மத்திய அரசு அவர்களுக்கு உதவும் வகையில் எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் கஷ்டத்துக்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தானில் வேலைப்பார்த்து வந்த புலம்பெயர் தொழிலாளி முகமது இக்பால் என்பவர், பாரத்பூர் மாவட்டம் ராரா கிராமத்தில் சாஹாப் சிங் என்பவரின் சைக்கிளைத் திருடி 250 கி.மீ தொலைவில் உள்ள சொந்த ஊரான உ.பி மாநிலம் பரேலிக்கு சென்றுள்ளார். இது சம்மந்தமாக அவர் ஒரு கடிதத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதில் ‘நான் குற்றவாளி. ஆனால், நான் ஒரு தொழிலாளி, மேலும் உதவி கிடைக்கப் பெறாதவன். நான் உங்கள் சைக்கிளை எடுத்துக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். சொந்த ஊருக்கு செல்ல எனக்கு வேறு வழியில்லை, எனக்கு ஒரு சிறப்பு திறன் கொண்ட குழந்தை உள்ளது. நான் பரேலிக்கு செல்ல வேண்டும்’ என எழுதியுள்ளார். இந்த சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.