வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (17:28 IST)

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தலித் பிரச்சனை குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்காததை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


 
 
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அவர் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தலித் மக்கள் பிரச்சனை குறித்து குரல் கொடுத்து வருகிறார்.
 
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இதனையடுத்து இன்று காலை நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியதும் மாநிலங்களவையில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேச தொடங்கினார்.
 
அப்போது மாயாவதிக்கு மூன்று நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி கொடுத்தார் அவைத்தலைவர் பி.ஜே.குரியன். அதன் பின்னர் மாயாவதி தலித்கள் மீதான தாக்குதல் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட அவைத்தலைவர் பி.ஜே.குரியன் உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது என அறிவுறுத்தினார்.
 
இதனால் ஆவேசமடைந்த மாயாவதி நான் இன்னும் பேசி முடிக்கவில்லை இடையில் நீங்கள் குறுக்கீடு செய்ய கூடாது. தலித்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக எனது கருத்தை பதிவு செய்வதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டால் நான் இந்த அவையின் உறுப்பினராக இருப்பதற்கு அர்த்தம் இல்லை என ஆவேசமாக கூறினார்.
 
அதன் பின்னர் பி.ஜே.குரியன் மாயாவதியை சமாதானப்படுத்தினார். ஆனால் பேச அனுமதிக்கவில்லை. இதனால் மீண்டும் ஆவேசமடைந்த மாயாவதி நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன் என சத்தமாக கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.
 
இந்நிலையில் தனது கட்சியினருடன் ஆலோசனை நடத்திய மாயாவதி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார். தலித் பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காததால் மாயாவதி தனது எம்பி பதவியையே ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.