வடமாநிலத்தவர் குறித்து போலி வீடியோ பரப்பிய மனீஷ் காஷ்யப் - விசாரணையில் சிக்கிய அதிர்ச்சி தகவல்!
தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது.
போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மணிஷ் காஷ்யப் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் மீது பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் மதுரை மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசிடம் புகார் மனு கொடுத்தன் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பீகாரில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த மனீஷ் காஷ்யப்பை தமிழகம் அழைத்து வந்து காவல்துறை விசாரணை செய்வதற்காக மணிஷ் காய்ஷப்பை கடந்த 30ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மதுரை மாவட்ட முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டு முதலாவது நீதீத்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி டீலாபானு முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையில் மனீஷ் காஷ்யப்பை 3நாள் போலீஸ் காவலில் விசாரணை செய்ய நீதிபதி டீலா பானு உத்தரவிட்டார். தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ்காஷ்யப் போலீஸ் காவல் முடிந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட இருந்த நிலையில் மாவட்ட நீதிமன்றம் இன்று விடுமுறை என்பதால் தாமரைத்தொட்டி பகுதியில் உள்ள நீதிபதி இல்லத்தில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் ஆஜர்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து பீகாரை சேர்ந்த யூடியூபர் மனீஷ் காஷ்யப்பை மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதில் மனீஷ் காஷ்யப் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை எனவும், ஒரு சில கேள்விகளுக்கு பதிலளிக்கையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்,
எனவே அந்த தகவலின் அடிப்படையில் பீகார் அழைத்துச்சென்று விசாரணை நடத்த வேண்டும், இதன் காரணமாக 7 நாள் போலீஸ் காவலில் மனீஷை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாத நிலையில் புதன்கிழமை 5ம் தேதி வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.