கேரளா குண்டுவெடிப்பு : உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!
கேரள மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் அருகே களமசேரி என்ற பகுதியில் கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டம் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இருவர் இறந்து விட்டதை அடுத்து இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த பகுதியில் வெடித்த வெடிகுண்டு IED ரக குண்டு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி வெடிகுண்டு வைத்தவர் சரணடைந்துள்ளதாகவும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரிமோட் மற்றும் குண்டு தயாரிக்க பொருட்களை போலீசார் கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் 52 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva