டெலிவரி பாயை கொன்று எரித்த இளைஞர்! – எல்லாம் ஒரு ஐபோனுக்காக??
கர்நாடகாவில் ஐபோன் ஆர்டர் செய்து அதை கொண்டு வந்த டெலிவரி பாயை இளைஞர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் ஹேமந்த் தத். ஐபோன் மீது ஆசைக்கொண்ட இவர் பல நாட்களாக ஐபோன் வாங்க முயற்சித்து வந்துள்ளார். சமீபத்தில் ஆன்லைனில் செகண்ட் ஹேண்ட் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அந்த ஐபோனை டெலிவரி செய்ய கடந்த 7ம் தேதி ஹேமந்த் நாயக் என்ற டெலிவரி பாய் வந்துள்ளார். காசு எடுத்து வருவதாக வீட்டிற்குள் அழைத்து சென்று உட்கார வைத்த ஹேமந்த் தத் சமையலறை சென்று ஒரு கத்தியை எடுத்து வந்து ஹேமந்த் நாயக்கை கொன்றுள்ளார். பின்னர் அவரை ஒரு சாக்கில் கட்டி கழிவறையில் வைத்துள்ளார்.
இரண்டு நாட்கள் கழித்து நாற்றம் எடுக்க தொடங்கவே பெட்ரோல் வாங்கி வந்து, நாயக் பிணத்தை ஆள் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று எரித்துள்ளார். அதன்பின் ஏதும் தெரியாதது போல இருந்து வந்துள்ளார்.
ஆனால் ஹேமந்த் நாயக் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் கடைசியாக ஐபோன் டெலிவரி கொடுக்க நாயக் சென்றதும் திரும்ப வராததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹேமந்த் தத்திடம் போலீஸார் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்கு பின்னாக பேசியது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமந்த் தத் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் பெட்ரோல் வாங்கி வருவது, நாயக் உடலை கொல்ல எடுத்து செல்வது ஆகிய காட்சிகள் பதிவாகியிருந்துள்ளது, அதன் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஐபோன் வாங்க காசு இல்லாததால் இவ்வாறு செய்ததாக ஹேமந்த் தத் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K